சிக்குமா சிறுத்தை? - கூண்டில் பன்றி, ஆடு வைத்து காத்திருக்கும் வனத்துறை

நின்னியூர் கிராமத்தில் உள்ள குட்டையில், சிறுத்தை தண்ணீர் குடித்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2024-04-12 15:34 GMT

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக் காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்துள்ளது. சிறுத்தை மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து செந்துறை போலீசார் வாகனத்தில் சென்றபடி ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் முந்திரி காட்டில் சுற்றிதிரியும் சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூரில் சுற்றிவரும் சிறுத்தையை பிடிக்க வஞ்சினாபுரம் பெரிய ஓடையில் கூண்டில் பன்றி மற்றும் ஆடு வைத்து வனத்துறையினர் காத்திருக்கின்றனர். நின்னியூர் கிராமத்தில் உள்ள குட்டையில், சிறுத்தை தண்ணீர் குடித்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணவை தேடி சிறுத்தை வரும்பட்சத்தில் அதனை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு காத்திருக்கின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்