தாம்பரம் மாநகராட்சி பகுதியில் திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அப்போது குடிசை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

Update: 2023-02-20 06:42 GMT

தலைமைச் செயலாளர் ஆய்வு

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அதன்படி அவர், சேலையூர் அறிவுசார் மையம், ஆனந்தபுரம் சுகாதார நிலையம், மாநகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், அன்னை அஞ்சுகம் நகர் சமுதாய கழிப்பிட கட்டிடப்பணி, குரோம்பேட்டை சுரங்க பாலம் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, பயிற்சி கலெக்டர் அபிலாஷ் கவுர், செயற்பொறியாளர் முருகேசன், மண்டல தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

குறைகளை கேட்டார்

கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் சுகாதார நிலையம் அருகே உரக்கிடங்கை பார்வையிட்ட இறையன்பு, உரக்கிடங்கில் துர்நாற்றம் வீசாத அளவு உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அன்னை அஞ்சுகம் நகரில் ஆய்வு பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் குடிசை வீடுகளில் வாழும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அங்குள்ள ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்து என்ன சமையல்? என கேட்டார்.

அப்போது குடிசைப்பகுதியில் வசித்த பெண்கள் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் அதற்கு அவர், "உங்களுக்கு வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தங்களுக்கு இதே பகுதியில் பட்டா கொடுங்கள் என பெண்கள் கேட்டனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமைச் செயலாளர்இறையன்பு உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்