வேலூரில் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
வேலூரில் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவை ருசி பார்த்து மாணவர்களுக்கு அவர் பரிமாறினார்.
வேலூர்,
'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அந்த திட்டத்தின்படி, முதலாவதாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் சென்றார்.
அங்கு 4 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
காலை உணவு திட்டம்
அதன் தொடர்ச்சியாக நேற்று வேலூர், சத்துவாச்சாரி, பாரதி நகரில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மைய கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மையத்தில் மருத்துவம் சார்ந்த தனிநபர் கண்காணிப்பு, மனநலம் சார்ந்த ஆலோசனை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதன் பின்னர் வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்திற்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திடீரென ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உணவின் தரம் குறித்து ஆய்வு
அதனைத்தொடர்ந்து சத்துவாச்சாரி, காந்தி நகரில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு நேரில் சென்று, உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவை முதல்-அமைச்சர் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அலமேலுமங்காபுரத்தில் 132 மாணவ, மாணவிகள் பயிலும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை ருசி பார்த்து பரிமாறினார்.
மாணவர்களை காத்திருக்க வைக்கக்கூடாது
மேலும், உணவை காலை 6.30 மணிக்குள் தயாரிக்க வேண்டும் என்றும், காலை 7.30 மணிக்கு பள்ளிகளில் உணவு பரிமாறப்பட வேண்டும் என்றும், மாணவர்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பறிமாற வேண்டும் என்றும், உணவு உண்ணும் மாணவர்களின் பதிவேடு சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர சத்தான மற்றும் தரமான உணவை மாணவர்களுக்கு வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.