மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

திருச்சியில் இருந்து தஞ்சை வரும் வழியில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணி நடைபெறுவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-07-27 19:10 GMT

திருச்சியில் இருந்து தஞ்சை வரும் வழியில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணி நடைபெறுவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் திருச்சி வந்தார். அன்று மாலை திருச்சியில் நடந்த வாக்குச்சாவடி தி.மு.க. பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

நேற்று காலை திருச்சியில் நடந்த வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் கார் மூலம் திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார்.

திடீர் ஆய்வு

தஞ்சைக்கு வரும் வழியில் செங்கிப்பட்டி அருகே உள்ள மனையேறிப்பட்டி என்ற இடத்தில் அவர் கார் வந்தபோது அந்த பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணி நடந்து வருவதை கேள்விப்பட்டு அங்கு திடீரென சென்றார்.

முகாமில் நடந்து வரும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிரமங்கள் உள்ளதா?

அங்கு பதிவு செய்த வந்த பெண்களிடம், விண்ணப்பங்களை பதிவு செய்வதில் உங்களுக்கு ஏதாவது சிரமங்கள் இருக்கிறதா? பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உங்கள் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்கிறார்களா? என்று கலந்துரையாடினார்.

தொடர்ந்து முகாமில் பணிபுரியும் பணியாளர்களிடம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நாள்தோறும் எவ்வளவு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது? பதிவு செய்யும்போது தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏதேனும் ஏற்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.

இலக்கை அடைய பணியாளர்களுக்கு அறிவுரை

மேலும் விண்ணப்பங்களை பதிவு செய்ய வரும் பெண்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளித்து உதவிட வேண்டும். விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டினை முறையாக பராமரிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டு உள்ள இலக்கினை அடைய வேண்டும் என்று முகாமில் உள்ள அலுவலர்களுக்கும். பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார், பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை வந்து சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

அமைச்சர்கள்

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக தஞ்சை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்