விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சிறந்த சமூக சேவையாற்றிய 14 பேருக்கு நினைவுப்பரிசு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சிறந்த சமூக சேவையாற்றிய 14 பேருக்கு நினைவுப்பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-04-27 18:45 GMT

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சிறந்த சமூக சேவை மற்றும் அரசுப்பணிகளை சிறப்பான முறையில் செய்த 14 பேருக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 14 பேருக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

மயக்க மருந்து நிபுணர்

இதில் இயற்கை உரத்தின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி வரும் திண்டிவனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியன், ஏழை மாணவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் இலவசமாக பாடங்களை நடத்தி வருவதோடு, ஊரக திறனாய்வு தேர்வு போன்ற தேர்வுகளை எழுதி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களுக்கு இலவசமாக பாடங்களை கற்றுக்கொடுத்து வரும் மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் சிவக்குமார், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களுக்கு உதவியதோடு, சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் ஏழை, எளிய தாய்மார்களை கனிவுடனும், அக்கறையுடனும் கவனித்து வரும் விழுப்புரம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஹாதீஜா பீபி, நோயாளிகளிடம் மிகவும் கனிவுடன் பேசி சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும் திண்டிவனம் அரசு மருத்துவமனை மயக்கமருந்து நிபுணர் மருத்துவர் வளவன், வேளாண்மை அலுவலகத்திற்கு வரும் விவசாயிகளின் தேவைகளை கேட்டறிந்து சரியான முறையில் தகவல் அளித்து உதவி வரும் திண்டிவனம் வேளாண்மை அலுவலக உதவியாளர் ஆறுமுகம்.

நடன பயிற்சி வகுப்பு

காவல்துறை பணியை சிறப்பாகவும், நேர்மையாகவும் ஆற்றி வருவதுடன், அவசர தொலைபேசி மூலம் கிடைக்கப்பெறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வரும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, விருத்தாசலம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சமுதாய நோக்கத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன், ரிசோர்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் கல்வி, சுற்றுச்சூழல், மருத்துவ முகாம்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் ஆகிய பணிகளை ஆற்றி வரும் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வேளாங்கன்னி, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்துவதோடு, நாடக மற்றும் நடன பயிற்சி வகுப்பு, களிமண் பொம்மைகள் செய்ய பயிற்சி, ஆடல் பாடலுடன் திருக்குறள் பயிற்சி வகுப்பு போன்ற பணிகளை ஆற்றி வரும் கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் பத்மஸ்ரீ.

ரத்ததானம்

ரத்ததான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம்களை மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து நடத்துவது, கண்கள் தானம், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது, ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய உதவுவது, அதிகமுறை ரத்ததானம் வழங்கியது போன்ற சமூக பணிக்காக சிதம்பரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமச்சந்திரன், கைதிகளிடம் கண்டிப்புடன் இருப்பதுடன் நேர்மையாக பணியாற்றி வரும் கடலூர் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன், கொலை முயற்சி, வெடிபொருள் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதில் திறமையாக செயல்பட்ட கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்