கலைஞர் நூலக கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மதுரையில் ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2022-06-07 20:47 GMT

மதுரை

மதுரையில் ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

மதுரை வந்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்த வரவேற்புக்கு பின், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் மதுரை-நத்தம் சாலையில் ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்திற்கு வந்தார். அங்கு அவர் நூலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். கருணாநிதி உருவச்சிலை அமைக்கப்படும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்டுமான பணிகள் குறித்து விளக்கி கூறினர்.

அங்குள்ள ஒவ்வொரு மாடிக்கும் சென்ற அவர் அங்கு என்னென்ன வசதிகள் செய்யப்படுகிறது என்பதனை கேட்டறிந்தார். மேலும் டிஜிட்டல் படங்கள் மூலம் அவருக்கு எந்த இடத்தில் என்னென்ன அரங்குகள் அமைக்கப்பட உள்ளது என்பது குறித்து விளக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகள் மற்றும் நூலகத்தில் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து சில ஆலோசனை வழங்கினார். அதன்பின் நூலக கட்டுமான பணிகள் குறித்த தற்போதைய நிலை மற்றும் அங்கு செய்ய உள்ள வசதிகள் குறித்த குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அதனை அவர் பார்த்தார். பணிகளை தரத்துடன், உரிய காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

வரவேற்பு

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., கோ.தளபதி எம்.எல்.ஏ., கலெக்டர் அனிஷ் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக மு.க.ஸ்டாலினை வரவேற்க ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலைஞர் நூலகம் பகுதியில் திரண்டு இருந்தனர்.

அவர்கள் திராவிட மாடல் முதல்வரே என்று கோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர். இந்த நூலக பணிகளை ஆய்வு செய்த பின் முதல்-அமைச்சர் மேலூருக்கு சென்றார். அங்குள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார். இன்று காலையில் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்கிறார்.

சென்னையில் உள்ள அண்ணா நூலகம் போல், மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி கருணாநிதியின் பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து மதுரையில் இந்த நூலகத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு செய்தது. இறுதியாக நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை வளாகம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி நேரில் வந்து ஆய்வு செய்து ஒப்புதல் தந்தார். அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி கலைஞர் நினைவு நூலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

குழந்தைகள் பகுதி

இந்த நூலகம் சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் கீழ்தளம் வாகன நிறுத்துமிடம் ஆகும். இங்கு 250 கார்களும், 300 மோட்டார் சைக்கிள்களும் நிறுத்த முடியும். இந்த நூலக கட்டிடம் தரைதளம் மற்றும் 6 மாடிகள் உள்பட 7 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. தரைதளத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான புத்தகங்கள், இருக்கைகள், 250 இருக்கை வசதியுடன் கூடிய கலையரங்கம் கட்டப்படுகிறது. முதல் தளத்தில் குழந்தைகள் நூலகமும், வாசகர்கள் தினசரி, வார, மாத பத்திரிக்கைகளை வாசிப்பதற்கான வசதிகள் இடம் பெறுகின்றன.

இந்த நூலகத்தின் 2-வது தளத்தில் கருணாநிதியின் கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாற்று சார்ந்த புத்தகங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் இடம்பெறுகிறது. மேலும் கலைஞரின் ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டு அங்கு அவரின் 4 ஆயிரம் ஆய்வறிக்கை புத்தகங்கள் இடம்பெற செய்யப்படுவதுடன் போட்டித்தேர்வுகளுக்காக படிக்கின்றவர்களை கருத்திற்கொண்டு அவர்களுக்காக 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன. 3-வது தளத்தில் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ் இலக்கியப்பகுதி தளமாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

90 சதவீத பணிகள் நிறைவு

நூலகத்தில் 4-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பகுதியாகவும், 5-வது தளத்தில் ஐம்பெரும்காப்பியங்கள், பதினெண்கீழ்கணக்கு உள்ளிட்ட அரிய வகை புத்தகங்களை வைப்பதற்கான பகுதியாகவும், 6-வது தளத்தில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தளமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் நகரும் படிகட்டுகள் வசதி, குளிர்சாதன வசதி என பல்வேறு நவீன வசதிகளுடன் நூலகத்தை அமைப்பதற்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் மாடித் தோட்டத்துடன் நூல்களை படிப்பதற்கான வசதியும், கலைக்கூடமும் அமைக்கப்படுகிறது. இந்த நூலக கட்டுமான பணியில் 450 வடமாநில தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கட்டிடம் கட்டி முடிப்பதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கால அவகாசம் இருந்தாலும் தற்போதே 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. 7 மாடி கட்டிடமும் தற்போது கட்டப்பட்டு உட்புற வேலைகள் நடந்து வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்