என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் அவர் பேசியபோது அவர் கூறியதாவது,
குறைகள் இருக்கட்டும் முதலில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்..
இந்த நிகழ்ச்சி மூலம் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது திருப் புத்தூர் என்று சொல்லக் கூடிய வகையிலே இந்த ஊர் மாறி இருக்கிறது.
கடந்த வாரம் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது முழுமையாக குணமடையாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் வர முடியவில்லை. இப்போது உங்களைப் பார்த்தவுடன் உற்சாகம் அடைந்துள்ளேன். மருந்து மாத்திரையை விட மக்களை சந்திப்பது தான் எனக்கு உற்சாகம் வருகிறது.
இங்குள்ள மக்களை சந்தித்து ஆட்சி எப்படி உள்ளது ஏதாவது குறை உள்ளதா என கேட்ட போது, குறைகள் இருக்கட்டும் முதலில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். ஓய்வெடுங்கள் எனக் கூறினார்கள். அவர்களின் சிரிப்பை பார்த்தேன். ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை நம்மாளும் பார்க்க முடிகிறது.
பல திட்டங்களுக்கு ஒரே விழா
இன்று நலத் திட்ட உதவிகள் மூலம் 16,820 குடும்பங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களை தேடி தேடி உதவி செய்யும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி. தற்போது திறக்கப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகமானது குறித்த காலத்திற்குள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் ஒரு திட்டத்திற்கு ஒரு விழா நடத்துவார்கள். தி.மு.க ஆட்சியில் பல திட்டங்களுக்கு ஒரே விழாவாக நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆட்சியை போல விழா எடுத்தால் 365 நாட்கள் விழா எடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு திட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசு
எந்த காலகட்டத்திலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்திய சுதந்திரத்திற்கு போராட்டத்திற்கு வழிகாட்டியது தமிழகம் தான், அதுவும் வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சி தான் முன்னோடியாக அமைந்தது. தற்போது இந்தியா முழுவதும் சமூக நீதி ஒலிக்கிறது. மாநில சுயாட்சி குரல் ஒலிக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர மற்ற மாநில முதலமைச்சர்கள் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தியதற்கு திமுக தான் காரணம். தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். அரசியல் நெறிமுறைகள் மட்டுமின்றி ஆட்சி நெறிமுறைகளும் இந்தியாவிற்கு முன்னதாக திமுக திகழ்கிறது. மாநில சுயாட்சி மக்களுக்கான திட்டங்கள் செயல்பாடு பெண்கள் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் வழிகாட்டியாக திமுக அரசு உள்ளது.
அண்ணா-கருணாநிதி
1967 ஆம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சர் ஆனார். அவர் மூன்று முத்தான திட்டங்களை நமக்கு தந்தார். ஆனால் இரண்டரை ஆண்டுகளில் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். பின்னர் கருணாநிதி திட்டங்களால் உருவானதுதான் இந்த நவீன தமிழகம். இந்த தமிழகம் கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள திட்டங்கள் இந்தியாவிற்கு அவசியமானதாகவும் முக்கியமானதாகவும் அமைந்துள்ளது.
வீறுநடை போடும் திராவிட ஆட்சி
அனைத்து மாநிலங்களும் வளரவேண்டும் நான் மாவட்டந்தோறும் திட்டங்களை அறிவித்து வருகிறேன். அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி முக்கியம் இதோடு நம் கடமை முடிந்து விடவில்லை. தனிமனித தேவையை நிறைவேற்ற வேண்டும்.
அதற்காக நேரில் மனுக்களை பெற்று தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். இதுதான் திராவிட ஆட்சி இந்த இயக்கம் இதில் இம்மியளவும் மாறாமல் ஆட்சி வீறுநடை போடும். உங்கள் குடும்பம் நன்றாக நலம் பெற வேண்டும் என்றால் பிள்ளைகளை நன்றாக படிக்க வேண்டும்.
அவர்கள் வேலையை தேடி தவிப்பதை தடுக்க நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது.
தமிழக மக்கள் வளர்ச்சிக்காக எனது உடல் சோர்வை பற்றி காண கவலைப்படாமல் என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன். அமைச்சர்களும் அதிகாரிகளும் அவ்வாறு தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி இந்த பொற்கால ஆட்சியை தொடர்வோம். இந்தியாவிற்கே முன்னோடியாக ஆட்சியாக வளரச் செய்வோம்.