திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Update: 2022-06-29 13:09 GMT

திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திறந்து வைத்தார்

திருப்பத்தூரில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பத்தூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அங்கு ரூ.110 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றியும் வைத்தார். அத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தை பார்வையிட்டார்.

அலுவலகங்கள்

புதிய கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தேர்தல் அலுவலகம், தபால் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட கருவூலம், ஏ.டி.எம். வசதியுடன் கூடிய வங்கி, மக்கள் குறைத்தீர்வு கூடம் ஆகியவையும், முதல் தளத்தில் மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறப்பு திட்ட அலுவலகம், மாவட்ட சமூகநல அலுவலகம், எல்காட் மையம், முத்திரைதாள் அலுவலகம் ஆகிய அலுவலகங்களும் இடம்பெற்று உள்ளன.

இரண்டாம் தளத்தில் மாவட்ட கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, நேர்முக உதவியாளர்கள் அறைகள், நில பிரிவு அலுவலகம் ஆகிய அலுவலகங்களும், மூன்றாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனர் அறை, உதவி இயக்குனர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களும், ஏனைய தளங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களும், மேலும் மூன்று பெரிய கூட்டரங்கங்கள், 3 சிறிய கூட்டரங்கங்கள், செயற்கை நீரூற்றுடன் கூடிய பூங்கா மற்றும் புல்வெளி, நடைபாதை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு, அலங்கார விளக்குடன் கூடிய தெரு விளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை மனு பெற்றார்

புதிய கலெக்டர் அலுவலகத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சர் ஸ்டாலின் பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, காந்தி, கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்