முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தென் மாவட்டங்களுக்கு பயணம்

திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு 14, 15, 16-ந் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2022-09-09 22:38 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலில் கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி, நெல்லை, மதுரை மாவட்டங்களுக்கு சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்னை திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவர் தென் மாவட்டங்களுக்கு செல்கிறார். அவரது பயணத் திட்டங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி 14-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு தோட்டனூத்து என்ற இடத்தில் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக 321 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். ரூ.17.17 கோடி செலவில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மதுரை, விருதுநகர்

பின்னர் அவர் மதுரைக்கு செல்கிறார். 15-ந் தேதி காலையில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மதுரை நெல்பேட்டை என்ற இடத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். பின்னர் அங்குள்ள அரசு பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அதைத் தொடர்ந்து விருதுநகருக்கு செல்லும் அவர் ரூ.70 கோடி செலவில் உருவாக இருக்கும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் விருதுநகர் அருகே நடைபெறும் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தொழில்முனைவோர் கூட்டம்

அதைத் தொடர்ந்து 16-ந் தேதி மதுரைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று, அங்கு தொழில் முனைவோர் கூட்டத்தில் அவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அன்று அங்கிருந்து சென்னைக்கு புறப்படுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்