திருச்சி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
செம்பட்டு:
முதல்-அமைச்சர் திருச்சி வருகை
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 9.35 மணிக்கு திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் சிவசங்கர், மெய்யநாதன், ரகுபதி, டி.ஆர்.பி.ராஜா, மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், இனிகோ இருதயராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொண்டர்களை சந்தித்தார்
தொடர்ந்து விமான நிலையத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை நுழைவு வாயில் வரை நடந்து வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, தொண்டர்கள், பூங்கொத்து, சால்வை, மரக்கன்று, புத்தகம் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து காரில் திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார்.
நிகழ்ச்சியில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர், மாநகர கமிஷனர் சத்தியபிரியா, மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கலைஞர் கோட்டம் திறப்பு
இன்று (திங்கட்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார். இதையடுத்து மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நாளை (செவ்வாய்க்கிழமை) திருவாரூரில் நடைபெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் கலந்து கொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார். விழா முடிந்ததும் இரவில் திருவாரூரில் இருந்து ரெயில் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்கிறார்.