தஞ்சையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தஞ்சையில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-09 04:21 GMT

தஞ்சை,

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடிக்காக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், தஞ்சையை அடுத்த ஆலக்குடியில் உள்ள முதலைமுத்துவாரியில் நீர்வழித் தடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அப்போது வரைபடம், புகைப்படம் மூலம் தூர்வாரும் பணிகள் குறித்து முதல்-அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.,நேரு, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளனர். ரூ.20 லட்சம் செலவில் சுமார் 3.5 கிமீ தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன.

அதனைத்தொடர்ந்து பூதலூர் தாலுகா விண்ணமங்கலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். முதல்-அமைச்சர் தஞ்சை வருகையையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்