திருச்சியில் ரூ.1,042 கோடியில் நலத்திட்டங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
திருச்சியில் இன்று நடக்கும் பிரமாண்ட விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,042 கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் ஒரு கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகமும் வழங்குகிறார்.
முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக திருச்சி வருகிறார். திருச்சியில் 3 இடங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9.25 மணி அளவில் திருச்சிக்கு வருகிறார்.
திருச்சி விமானநிலையத்தில் அவருக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு வருகிறார். அவர் வரும் வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். கட்சியினரின் வரவேற்பை ஏற்று கொள்ளும் முதல்-அமைச்சர் அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலுக்கு வருகிறார். அங்கு காலை 9.30 மணி அளவில் அரசு விழா நடக்கிறது.
ரூ.1,042 கோடியில் திட்டங்கள்
அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.655 கோடி மதிப்பில் 5,639 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.79 கோடி மதிப்பில் 22 ஆயிரத்து 716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என ரூ.1,042 கோடி மதிப்பில் திட்டங்களையும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன்கள், மணிமேகலை விருது, மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகள் ஆகியவை வழங்கி விழா உரையாற்றுகிறார். இந்த விழாவில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், சமீபத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.
அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விழா நிறைவு பெற்றதும், அங்கிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மணப்பாறை ஒன்றியம் மொண்டிப்பட்டிக்கு புறப்பட்டு செல்கிறார். அவர் செல்லும் வழியில் அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து மொண்டிப்பட்டி வரை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மொண்டிப்பட்டியில் காலை 11.30 மணி அளவில் ரூ.1,350 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காகித ஆலையின் (டி.என்.பி.எல்.) 2-வது அலகையும், சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலக கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.
மருந்து பெட்டகம்
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் 1.30 மணி அளவில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டியில் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வரும் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு சென்று நலம் விசாரிக்கிறார். பின்னர் இந்த திட்டத்தின் சாதனை நிகழ்வாக 1 கோடியே 1-வது பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்குகிறார்.
பின்னர் அதே கிராமத்தில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதை பார்வையிடுகிறார். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகத்தில் கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
பலத்த பாதுகாப்பு
மேலும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றி வரும் இடைநிலை சுகாதார செவிலியர்கள், தன்னார்வலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 10 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிக்கும் கருவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார். பின்னர் விழாவை முடித்து கொண்டு மாலை 2.30 மணிக்கு மேல் திருச்சி விமானநிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விமானநிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா விளையாட்டு அரங்கம், மொண்டிப்பட்டி, சன்னாசிப்பட்டி ஆகிய இடங்களுக்கு செல்லும் வழிநெடுகிலும் அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டு, சாலையின் இருபுறத்திலும் கட்சி கொடிகள் நடப்பட்டுள்ளன. இதேபோல் விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்-அமைச்சரின் வருகையையொட்டி திருச்சி விமானநிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் செல்லும் வழியிலும் மற்றும் விழா நடைபெறும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தலைமையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் தலைமையிலும் முதல்-அமைச்சர் வருகையின்போது, செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி.சரவணசுந்தர், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டிரோன்கள் பறக்க தடை
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம், மொண்டிப்பட்டி காகித ஆலை, சன்னாசிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதையொட்டி முதல்-அமைச்சர் திருச்சி வந்து, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் சென்னை செல்லும் வரை பாதுகாப்பு நலன்கருதி மேற்கண்ட வழிகளில் இன்று (வியாழக்கிழமை) எந்தவித டிரோன்களும் பறக்க விட மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.