சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: பக்தர்கள் 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பக்தர்கள் வருகிற 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-06-12 16:27 GMT

கடலூர், 

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன்பிறகு அரசு உத்தரவுபடி தற்போது பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தீட்சிதர்கள் மறுப்பு

இதற்கிடையே கடந்த 7,8-ந்தேதிகளில் சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையில் இணை, துணை ஆணையர்கள், தணிக்கை அதிகாரி கொண்ட குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்காக வந்தனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மாறாக நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு அல்ல என்றும் கூறி, வரவு- செலவு கணக்குகளை ஒப்படைக்க தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.

இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர், இது பற்றி ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பக்தர்கள் ஆலோசனை வழங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆலோசனை வழங்கலாம்

அதில், சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து விசாரணை மேற்கொள்ள இந்து சமய அறநிலைய அறக்கட்டளைகள் சட்டத்தின் சட்ட பிரிவு 23 மற்றும் 33-ன்படி ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம், கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) மற்றும் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், துணை ஆணையர், ஒருங்கிணைப்பாளரிடம் நேரில் கருத்துகளை அளிக்கலாம் அல்லது அஞ்சல் மற்றும் vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் கருத்துகளை அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்