செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டம்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

Update: 2022-07-26 20:14 GMT

பாளையங்கோட்டையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட்

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி, ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து நெல்லைக்கு ஜோதி வந்து சேர்ந்தது.

இரவு முழுவதும் போட்டி

சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், இந்த ஜோதியை பெற்று வந்து பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தின் உள் விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். தொடர்ந்து அங்கு நேற்று முன்தினம் இரவு முழுவதும் செஸ் போட்டிகள் நடைபெற்றன.

நேற்று காலை 7 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு செஸ் விளையாடினார்கள். இதில் சிறப்பாக விளையாடிய 10 பேருக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கி பாராட்டினார்.

அப்பாவு தொடங்கி வைத்தார்

இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை சபாநாயகர் அப்பாவு பறக்க விட்டார்.

மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ஜோதி பயணம் காந்திமதி பள்ளிக்கூடம், அண்ணா விளையாட்டு மைதானம், நாங்குநேரி, வள்ளியூர் வழியாக கன்னியாகுமரி மாவட்டம் சென்றது.

பாளையங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, செஸ் கழக நிர்வாகிகள் பால்குமார், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்