செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பஸ்கள்
நீலகிரியில் செஸ் ஒலிம்பியாட் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 3 பஸ்களை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊட்டி,
நீலகிரியில் செஸ் ஒலிம்பியாட் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 3 பஸ்களை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்-2022 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலட்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பள்ளி பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் கொடியசைத்து 3 பஸ்களை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 15 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. வருகிற 28-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 10-ந் தேதி வரை போட்டி நடக்கிறது.
மாணவர்களிடம் விழிப்புணர்வு
இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் 3 பள்ளி பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் இலட்சினை மற்றும் சின்னத்துடன் நம்ம செஸ், நம் பெருமை, இது நம்ம சென்னை, நம்ம செஸ், வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு பள்ளி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஒ. துரைசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ்குமார், ஊட்டி தாசில்தார் ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.