செஸ் ஒலிம்பியாட் ஜோதி தஞ்சைக்கு வந்தது

தஞ்சைக்கு நேற்று வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-07-26 20:16 GMT


தஞ்சைக்கு நேற்று வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்கநாளில் ஜோதி ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை டெல்லியில் கடந்த மாதம் 19-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நேற்று கன்னியாகுமரியில் இருந்து 75-வது நகரமாக தஞ்சைக்கு நேற்றுமாலை செஸ் ஒலிம்பியாட் ஜோதி கொண்டு வரப்பட்டது.

அமைச்சர்கள் வரவேற்பு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விளையாட்டு வீரர்களுடன் இந்த ஜோதி புதிய பஸ் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் பெரியகோவில் வரை இந்த ஜோதி எடுத்து செல்லப்பட்டது.பின்னர் அங்கிருந்து மாணவ, மாணவிகளுடன் மேளதாளம் முழங்க, யானை முன்செல்ல, குதிரை சாராட் வண்டியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருடன் கிராண்ட் மாஸ்டர்கள் அர்ஜூன் கல்யாண், ஸ்‌ரீஜா சேஷாத்ரி ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தியபடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

கிராமிய கலைநிகழ்ச்சிகள்

அங்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி ஆகியோர் செஸ் வீரர்களிடம் இருந்து ஜோதியை பெற்று பள்ளி மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்தனர். இதையடுத்து மீண்டும் ஜோதியானது கிராண்ட் மாஸ்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த ஜோதியை சென்னைக்கு காரில் கொண்டு சென்றனர்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்