சென்னை-பெங்களூரு வரை விமானத்தில் பறந்தபடி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி
சென்னை முதல் பெங்களூரு வரை விமானத்தில் பறந்தபடி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது. மாணவர்களின் இந்த விமான பயணத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வரை அழைத்துச் சென்று வரப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு முழுவதும், பள்ளி அளவில் செஸ் போட்டிகள் நடைபெற்று, அதில் வெற்றி பெற்றோர், வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பின் அதன் வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடினர். அதிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காணவும், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் பறந்தபடி செஸ் போட்டி
இப்போட்டிகள் 1 முதல் 5-ம் வகுப்புகள், 6 முதல் 8-ம் வகுப்புகள், 9 முதல் 10-ம் வகுப்புகள், 11 முதல் 12-ம் வகுப்புகள் என 4 பிரிவுகளாக நடைபெற்றன. வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 73 மாணவிகள், 76 மாணவர்கள் என மொத்தம் 149 மாணவ-மாணவிகள், 3 ஆசிரியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூரு வரை அழைத்து செல்லப்பட்டனர். விமானத்தில் பறக்கும் போதே மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. விமானத்தில் பறந்து கொண்டே மாணவர்கள் செஸ் விளையாடினர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின், மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து அனைவருக்கும் செஸ் ஒலிம்பியாட் சின்னமான 'தம்பி' சிலையை பரிசாக வழங்கி, பாராட்டி வழியனுப்பி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, பள்ளிக்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விமானத்தில் பயணம் செய்து கடல், வான், மேகம் ஆகியவற்றை கண்டுகளித்த மாணவ-மாணவிகள் சென்னை விமான நிலையத்தில் தங்கள் விமான பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-
மகிழ்ச்சி
தாம்பரம் டேனியல் கூறும்போது, "விமானத்தில் செல்வேன் என எதிர்ப்பார்க்கவே இல்லை. மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.
அரியலூரைச் சேர்ந்த வெற்றிவேல், "விமானத்தில் பயணம் செய்தது சந்தோசமாக இருந்தது. இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தது இல்லை. இதை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி" என்றார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவ், "முதல் முறையாக விமானத்தில் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் விமானத்தில் பயணம் செய்வது பயமாகவும் இருந்தது" என்றார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கோகுல், "விமானத்தில் சென்றது சிறந்த புது அனுபவமாக இருந்தது" என்றார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த மில்டன் அந்தோணி கூறும்போது, "விமானத்தில் சென்றால் வயிறு வலிக்கும் என நினைத்தேன். விமானத்தில் செல்ல வேண்டும் என்பது எனது ஆசை. சிறு வயதில் இருந்தே செஸ் விளையாடி வருகிறேன்" என்றார்.
பயமாக இருந்தது
கிருஷ்ணகிரியை சேர்ந்த ஷாவனி கூறும்போது, "3 நாள் பயணமாக அழைத்து வந்தனர். 2-வது நாள் விமானத்தில் அழைத்து சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. விமானத்தில் ஏறும் போதும் தரை இறங்கும்போதும் பயமாக இருந்தது. சாப்பாடு தந்தார்கள். இது போல் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என நினைத்து கூட பார்த்ததில்லை" என்றார்.
புதுக்கோட்டையை சேர்ந்த ஜோதிகா கூறும்போது, "அரசு பள்ளி மாணவர்களின் கனவுகள் நனவாக பணம் தடையாக இருப்பதை தடுத்து, எங்களையும் விமானத்தில் பயணம் செய்ய வைத்த முதல்-அமைச்சர் உள்பட அனைவருக்கும் நன்றி" என்றார்.
வீரர்களுக்கு விபத்து மருத்துவ காப்பீடு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெறும் செஸ் வீரர்கள் ரூ.2 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.