சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 11 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 11 அடி உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 11 அடி உயர்ந்துள்ளது.
பரவலாக மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. நேற்றும் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதையொட்டி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,545 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3.15 அடி உயர்ந்து, 59.40 அடியாக காட்சி அளித்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 355 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
சேர்வலாறு அணை
சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11.28 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 69.75 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 11.28 அடி உயர்ந்து நேற்று 81.03 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 43.85 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 90 கன அடியாக உள்ளது. இதுதவிர கொடுமுடியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு 44 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 15.75 அடியாக உயர்ந்துள்ளது.
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மணிமுத்தாறு -12, பாபநாசம் -20, சேர்வலாறு- 13, கொடுமுடியாறு-8, கன்னடியன் அணைக்கட்டு -8, அம்பை -8, சேரன்மாதேவி -3, களக்காடு -4, மாஞ்சோலை -20, காக்காச்சி -40, நாலுமுக்கு -62, ஊத்து -42.