சென்னை: சாலையோர பள்ளத்தில் பாய்ந்த தனியார் ஆம்னி பஸ் - 10 பேர் காயம்
பூந்தமல்லி அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஆம்னி பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது.
பூந்தமல்லி,
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி இன்று அதிகாலை தனியார் ஆம்னி சொகுசு பஸ் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஆம்னி பஸ்சை இடிப்பது போல் வந்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி வெளியேற முயன்றனர். பஸ்சின் அவசர கால வழி திறக்காததால் முன்பக்க கண்ணாடியை உடைத்து அந்த வழியாக பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று அங்கிருந்து மாற்று வாகனத்தில் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டடனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.