சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்ல விரைந்து நடவடிக்கை
சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சிவகாசி,
சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தற்காலிக நிறுத்தம்
சென்னையில் இருந்து சிவகாசி வழியாக கொல்லம் செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் கொரோனா பரவலுக்கு முன்னர் சிவகாசி ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ரெயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் இயக்கப்பட்ட போது சிவகாசியில் நிற்காமல் சென்றது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் போதிய பயணிகள் சிவகாசியில் ஏறுவதில்லை என்ற காரணத்தை கூறியது. அதன் பின்னர் சிவகாசி பகுதியில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
நடவடிக்கை
இந்தநிலையில் மத்திய ரெயில்வே அமைச்சகம் சென்னை-கொல்லம் ரெயில் சிவகாசியில் நின்று செல்லும் என்று அறிவித்தது. ஆனால் எப்போது முதல் இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்படவில்லை. இதனால் தற்போது சென்னையில் இருந்து சிவகாசி வரும் பயணிகள் கொல்லம் ரெயிலில் சிவகாசியில் இறங்க முன்பதிவு செய்ய முயன்றும் அது முடியாமல் போவதாக கூறப்படுகிறது.
ஆதலால் சிவகாசியில் ரெயிலை நிறுத்த தேவையான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.