சென்னை நகை வியாபாரியை அரிவாளால் வெட்டி 1 கிலோ தங்க நகை கொள்ளை

திருவள்ளூர் அருகே ெமாபட்டில் சென்ற சென்னையை சேர்ந்த நகை வியாபாரியை அரிவாளால் வெட்டி 1 கிலோ தங்க நகைகள், ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-11 21:49 GMT

திருவள்ளூர்,

சென்னை கொண்டித்தோப்பு சுப்புராயபிள்ளை தெருவை சேர்ந்தவர் சேஷா ராம் (வயது 25). நகை வியாபாரியான இவர், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நகை கடைகளில் ஆர்டர் பெற்று நகைகளை விற்று வந்தார். கடைகளுக்கு அவரே நகைகளை மொபட்டில் கொண்டு சென்று கொடுத்து வருவது வழக்கம். சேஷா ராம் நகையுடன் திருவள்ளூர் வந்து வியாபாரம் செய்து விட்டு சென்னைக்கு மொபட்டில் அடிக்கடி செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் சென்னை சவுகார்பேட்டையில் இருந்து திருவள்ளூருக்கு நகை வியாபாரத்துக்கு தனது மொபட்டில் சேஷா ராம் வந்தார். பின்னர் வியாபாரம் முடிந்து 1 கிலோ நகை மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவற்றை தனது மொபட் சீட்டின் கீழ் வைத்துகொண்டு திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

அரிவாளால் வெட்டிய கும்பல்

சேஷா ராம் வருவதை நோட்டமிட்ட 8 பேர் கொண்ட கும்பல் ராமாபுரம் அருகே வரும்போது 3 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்தனர். திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியில் சி.டி.எச். சாலையில் சேஷாராம் சென்று கொண்டு இருந்தபோது அவரை மறித்து சுற்றி வளைத்து நகை, பணத்தை தரும்படி அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சேஷா ராம் நகை பணத்தை கொடுக்க மறுத்து கூச்சலிட்டார்.

ஆத்திரமடைந்த அந்த கும்பல் அரிவாளால் சேஷாராமை சரமாரியாக வெட்டினர். சேஷா ராம் தடுத்தபோது அவரது வலது கையில் வெட்டு விழுந்தது. அவரது வயிற்றிலும் கத்திக்குத்து விழுந்தது.

கொள்ளையர்களை துரத்திய போலீசார்

அப்போது சேஷா ராம் மொபட்டில் இருந்த சாவியை எடுத்து சாலையோரம் புதரில் வீசியதால் அதில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுக்க முடியவில்லை. உடனே 2 பேர் மொபட்டில் அமர்ந்தவாறு மற்றொரு மோட்டார் சைக்கிள் உதவியுடன் வேகமாக தள்ளி கொண்டு அங்கிருந்து தப்பினர். வெட்டு காயமடைந்த சேஷாராமின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொள்ளை குறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் கொள்ளையர்களை பொதுமக்கள் துரத்தி சென்றனர்.

தகவலின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசாரும் சுற்றுபுறங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் திருமலை நகர் அருகே சாலையில் அவர்களை செல்வதை கண்டுபிடித்து போலீசார் மற்றும் பொதுமக்கள் விரட்டி சென்றனர்.

3 பேர் பிடிபட்டனர்

அப்போது சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கும்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 3 கொள்ளையர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். உடனடியாக போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். மற்ற 5 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் போலீஸ் இணை கமிஷனர் டாக்டர். விஜயகுமார், ஆவடி போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் ஜவஹர், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், ஆனந்தக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் பிடித்து செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் அடுத்த ஓதிக்காடு செங்குன்றம் சாலையில் வசிக்கும் ஆதித்யா (19), ஒதிக்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரவணா (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுனில் என்ற எழிலரசன் (24) என்பது தெரிய வந்தது.

நகை, பணம் மீட்பு

இதையடுத்து செவ்வாப்பேட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இவர்களிடமிருந்து சேஷா ராம் கொண்டு சென்ற 1 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம், மோட்டார் சைக்கிள் மற்றும் அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நகை வியாபாரியை வழிமறித்து அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்