சென்னை வந்த விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை - கைகள் படத்தான் செய்யும் என எகிறிய இளைஞர்: முடிவில் காவல் நிலையத்தில் பம்மிய சுவாரஸ்யம்...!

சென்னை வந்த விமானத்தில் பெண் பயணிக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-20 14:43 GMT

சென்னை,

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, அபுதாபியிலிருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 156 பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் பயணித்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், திடீரென கூச்சல் போட்டுக் கத்தினார். இதை அடுத்து சக பயணிகளும், விமானப் பணிப்பெண்களும் அந்த இளம் பெண்ணிடம் என்ன நடந்தது? என்று கேட்டனர்.

அப்போது அந்த இளம் பெண், தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணி சுமார் 25 வயது உடைய இளைஞர், தன்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு, தொல்லை கொடுப்பதாகப் புகார் தெரிவித்தார். இதை அடுத்து அந்த இளைஞரை, விமானப் பணிப் பெண்கள் சக பயணிகளும் கடுமையாகக் கண்டித்தனர்.

அப்போது அந்த இளைஞர் தூக்கத்தில், தவறுதலாக கை பட்டு விட்டது என்று கூறினார். ஆனால் அந்த இளம் பெண், இளைஞர் பொய் சொல்கிறார். ஒருமுறை அல்ல, தொடர்ந்து பல முறை, அவருடைய கைகள் என்னை நோக்கி வந்தன. நான் அவருடைய கைகளைப் பலமுறை தட்டி விட்டேன். ஆனாலும் தொடர்ந்து அவர் அதைப் போல் செய்தார் என்று புகார் கூறினார்.

இதை அடுத்து விமானப் பணிப்பெண்கள், விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விமான கேப்டன் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து, பாதுகாப்பு அதிகாரிகளைத் தயார் நிலையில் இருக்கும்படி செய்தார்.

அதன்பின்பு அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, பெண் பயணிக்கு விமானத்துக்குள் தொல்லை கொடுத்த, இளைஞரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அதோடு அவரை பாதுகாப்புடன் சுங்கச் சோதனை, குடியுரிமைச் சோதனைகளை முடித்த பின்பு விமான நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர், பயணிகள் விமானத்தில் சக பயணியின் மீது தெரியாமல் கைகள் படத்தான் செய்யும். அது ஒரு குற்றமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதை அடுத்து விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரைச் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதோடு அந்த இளைஞர் மீது புகார் கொடுப்பதற்காக அந்தப் பெண் பயணியும் காவல் நிலையம் சென்றார்.

இதற்கு இடையே விமானத்தில் வீராப்பு பேசிய அந்த இளைஞர், காவல் நிலையம் வந்ததும், திடீரென பல்டி அடித்தார். ஏதோ தெரியாமல் செய்து விட்டேன்.. என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதார். அதோடு அந்த பெண் பயணியிடமும், மன்னிப்பு கேட்டு நான் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்துவிட்டு, விடுமுறையில் சொந்த ஊர் வருகிறேன். நீங்கள் புகார் செய்தால் என் வேலையும் போய்விடும் என்று கூறி அழுதார்.

இதை அடுத்து அந்தப் பெண் பயணி மனம் இறங்கி நான் இவர் மீது புகார் கொடுக்க விரும்பவில்லை. இவரை எச்சரித்து அனுப்பி விடுங்கள் என்று கூறி புகார் கொடுக்காமல் சென்று விட்டார். இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார், புகார் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்த இளைஞரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்