ஆட்டோ மீது சரக்கு வேன் மோதல்; சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
தேவதானப்பட்டி அருகே ஆட்டோ மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் பலியாகினர்.
தேவதானப்பட்டி அருகே ஆட்டோ மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் பலியாகினர்.
சென்னை தம்பதி
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 69). இவரது மனைவி சந்திரிகா (61). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். மேலும் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலை அடிவாரம், காமக்காப்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் கமலக்கண்ணனுக்கு சொந்தமான வீடு ஒன்றும் உள்ளது.
இந்த வீட்டிற்கு அவ்வப்போது கமலக்கண்ணன் தனது குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். அதன்படி கமலக்கண்ணனும், அவரது மனைவி சந்திரிகாவும் காமக்காப்பட்டி ரிசார்ட் வீட்டில் கடந்த சில வாரங்களாக தங்கி இருந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் அவர்கள் சென்னைக்கு சென்றனர்.
இந்தநிலையில் மீண்டும் காமக்காப்பட்டிக்கு செல்ல அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து பஸ்சில் வத்தலக்குண்டுவுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ்சில் காட்ரோடு பிரிவுக்கு வந்தனர். அங்கிருந்து காமக்காப்பட்டி ரிசார்ட்டுக்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றை சவாரிக்காக அவர்கள் அழைத்தனர். அதன்படி கெங்குவார்பட்டி அக்ரஹார படித்துறை தெருவை சேர்ந்த அருள்குமார் (வயது 35) என்பவரது ஆட்டோவில் கமலக்கண்ணனும், அவரது மனைவியும் சென்றனர்.
ஆட்டோ கவிழ்ந்தது
வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவு என்ற இடத்தில் ஆட்டோ சென்றபோது, எதிரே கொடைக்கானல் பூம்பாறையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்தது. மேலும் அந்த வேனின் முன்னால் சைக்கிளில் கெங்குவார்பட்டியை சேர்ந்த அன்னசாமி (50) என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சைக்கிளின் மீது மோதாமல் இருக்க சரக்கு வேனின் டிரைவர், தனது வாகனத்தை திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், சைக்கிள் மீது உரசியபடி சென்றதுடன், எதிரே அருள்குமார் ஓட்டி வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த கமலக்கண்ணன், அவரது மனைவி சந்திரிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். ஆட்டோ டிரைவர் அருள்குமார் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். சைக்கிளில் வந்த அன்னசாமியும் கீழே விழுந்து காயமடைந்தார்.
3 பேர் பலி
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது உயிருக்கு போராடிய அருள்குமாரையும், அன்னசாமியையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருள்குமார் உயிரிழந்தார். அன்னசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் கமலக்கண்ணன், சந்திரிகாவின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவரான பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.