சென்னை வங்கி கொள்ளை வழக்கு: நகையை உருக்க முயன்ற பட்டறை உரிமையாளர் கைது

சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், நகையை உருக்க முயன்ற பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-16 21:08 GMT

கோவை,

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச்சேவை மையத்தில் கடந்த 13-ந்தேதி 31.7 கிலோ நகைகள் கொள்ளை போனது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 30), பாலாஜி (28) முக்கிய குற்றவாளியான முருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

நகை பட்டறை உரிமையாளர்

இந்த கொள்ளை சம்பவத்தில் கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சவ் (31) மற்றும் சூர்யா(31) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த ஸ்ரீவத்சவ்வை போலீசார் நேற்றுமுன்தினம் மடக்கிபிடித்து கைது செய்தனர்.

இதற்கிடையே தன்னை போலீசார் தேடுவதை அறிந்த சூர்யா, தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து தப்பிவிட்டார்.

தனிப்படையினரிடம் சிக்கிய ஸ்ரீவத்சவ்விடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்த விவரம் வருமாறு:-

திடுக்கிடும் தகவல்கள்

சென்னை வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் உள்ளிட்டோர் உருக்க திட்டமிட்டனர். இதற்காக சென்னை அரும்பாக்கத்தில் விடுதி ஒன்றில் அறை எடுத்தனர். நகையை உருக்குவதற்காக தனது நண்பர் செந்தில்குமாரின் அழைப்பை ஏற்று, ஸ்ரீவத்சவ் சென்னை வந்தார். விடுதியில் கிலோ கணக்கில் நகைகள் இருந்ததால், பேராசைப்பட்டு அந்த நகைகளை உருக்கி தரவேண்டும் என்றால் ரூ.5 லட்சம் தரவேண்டும் என்று பேரம் பேசியுள்ளார். வேறு வழியில்லாததால் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு நகைகளை உருக்கும் பணியில் ஸ்ரீவத்சவ் ஈடுபட்டார். அப்போது அறையில் இருந்து அதிகப்படியான புகை வெளியேறியது. இதனால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய அவர்கள், நகையை உருக்கும் பணியை கைவிட்டனர். பின்னர் அந்த நகைகளை பங்குபோட்டுக்கொண்டு விடுதியைவிட்டு வெளியேறினர். இதில், சூர்யாவின் பங்காக 13.7 கிலோ நகையை கிடைத்தது. இந்த நகையை கோவைக்கு கொண்டு வந்து உருக்கி, அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஸ்ரீவத்சவ், கமிஷனாக கேட்டதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்