சென்னை அண்ணா சாலையில் ரூ.621 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படுவதற்காக நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
சென்னை அண்ணாசாலையை நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், இந்த சாலையில் பல்வேறு சந்திப்புகள் இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன்காரணமாக கிண்டி, தாம்பரம் போன்ற முக்கியச் சாலைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனை தவிர்க்கும் விதமாக தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த பட்ஜெட்டின் போது அறிவித்திருந்தது.
இந்நிலையில், எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே இறங்கும் வகையில் அமையவுள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படுவதற்காக நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அண்ணாசாலையில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.