சென்னையின் 2-வது விமான நிலையம் பன்னூரில் அமைய வாய்ப்பு

சென்னையின் 2-வது விமான நிலையத்தை பன்னூரில் அமைக்க சாதகமான அம்சங்கள் இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2022-06-16 23:45 GMT

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

எனவே சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது.

இதற்காக சுங்குவார்சத்திரம் அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பன்னூர், காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

சாத்தியக்கூறு அறிக்கை

இதில் பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்டன. அவற்றில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டு முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்துள்ளன.

அதாவது, பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்களிலும் உள்ள மொத்த நிலப்பரப்பு, சாலை, ரெயில் போக்குவரத்தை சுலபமாக இணைக்கும் வசதி, மின்சார வசதி, சென்னை நகரில் இருந்து இந்த இடங்களை அடைவதற்கான தூரம் போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், பரந்தூர், பன்னூர் ஆகிய 2 இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ள போதிலும் பரந்தூரை விட பன்னூரில் கூடுதல் அம்சங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதேவேளையில் சில சவால்கள் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

போதுமான இடவசதி

அந்த சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு:-

பன்னூரில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலமும், பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 2 இடங்களும் இரு ஓடு தளங்கள் அமைக்கும் வகையிலும், விமானங்களை நிறுத்த போதுமான இட வசதியுடனும் உள்ளன.

இந்த 2 இடங்களையும் சென்னை சென்டிரல், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்தும், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், சென்னை விமான நிலையம், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்தும் வாகனங்கள் மூலம் சென்றடைவதற்கு ஆகும் நேரம் மற்றும் தூரம் கணக்கிடப்பட்டது.

குறைவான தூரம்-பயண நேரம்

இதில் பரந்தூரை விட, மேற்படி இடங்களில் இருந்து பன்னூர் குறைவான தூரத்தில் இருப்பதும், குறைவான பயண நேரமே ஆவதும் தெரியவந்தது.

மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடை இரு இடங்களிலும் உள்ளது. இரு இடங்களின் அருகிலும், சுற்றிலும் உயர்மின் அழுத்த கோபுரம், செல்போன் கோபுரம், மின் கம்பங்கள் போன்றவை உள்ளன. இத்தகைய தடைகள் செயல்பாட்டுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என இதுவரை அறியப்படவில்லை.

இதுகுறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று ஆலோசனை

இந்த முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை சென்னையின் 2-வது விமான நிலையம் பன்னூரில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதையே காட்டுகிறது.

இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவினர் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.

இதில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ள இடம் உள்ளிட்ட முக்கியமான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்