செங்கல்பட்டு: மின்சார ரெயிலில் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை
சிங்கப்பெருமாள் கோவிலில் மின்சார ரெயிலில் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு பட்டு என்கிற நிரோஷா (20) என்ற மகள் உள்ளார். இவர் பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரை தினசரி அவரது தந்தை திருக்கச்சூரில் உள்ள தனது வீட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் வரை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து விடுவார்.
மாணவி நிரோஷா இங்கிருந்து கல்லூரிக்கு மின்சார ரெயில் மூலம் செல்வது வழக்கம். எப்போதும் போல் இன்று தனது மகளை ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்த நிரோஷா திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற விரைவு மின்சார ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிரோஷாவின் பையில் கடிதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அதனை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.