கல்லக்குடி:
புள்ளம்பாடி ஒன்றியம், வந்தலைகூடலூரில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தொடங்கி வைகாசி மாதம் வரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்களாக கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு குதிரை வாகனத்தில் சாமி திருவீதி உலா, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அவரவர் வீடுகளுக்கு முன்பு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை செல்லியம்மன் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் வந்தலைகூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பு.சங்கேந்தி, நஞ்சை சங்கேந்தி, குமுளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி, சிறுவயலூர், தாப்பாய், வரகுப்பை, மேலரசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவையொட்டி தினமும் இரவில் கலை நிகழ்ச்சி மற்றும் வாண வேடிக்கை நடைபெற்றது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகேசன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், இளைஞர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.