செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரிக்கு வந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு வந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் உற்சாக வரவேற்பு
அதன்படி இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணம் கடந்த மாதம் தொடங்கி இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் எடுத்து வரப்பட்டது. இந்த ஜோதி தமிழ்நாட்டிற்குள் கோவை மாநகரத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர், கோவையில் இருந்து ஜோதியானது கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு நேற்று காலையில் வந்தடைந்தது. ஜோதியை கிராண்ட் மாஸ்டர் நிலோபர்தாஸ் ஊர்வலமாக எடுத்து வந்தார்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா சங்கேதன், தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் குமரி மாவட்ட செஸ் விளையாட்டு கழகம் சார்பில் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஜோதி கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் கலைநிகழ்ச்சி
அதன்பிறகு ஒலிம்பியாட் ஜோதி திருவள்ளுவர் சிலை வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஜோதியை வீரர் மற்றும் வீராங்கனைகள் சிலையை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கம் கடற்கரையில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் ஜோதியை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சர்வதேச நடுவரும், குமரி மாவட்ட செஸ் விளையாட்டு கழக செயலாளருமான வின்ஸ்டன் வரவேற்று பேசினார்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி தஞ்சாவூருக்கு எடுத்து செல்லப்பட்டது.