செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு

புதுச்சேரியில் இருந்து கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான விழாவில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-07-25 17:00 GMT


புதுச்சேரியில் இருந்து கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான விழாவில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த மாதம் 19-ந் தேதி டெல்லியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பல்வேறு மாநிலங்கள் வழியாக வந்த இந்த ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி நேற்று கோவை வந்தது. கோவை ரேஸ்கோர்சில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து இந்த ஒலிம்பியாட் ஜோதி ஊர்வலமாக கொடிசியா வளாகத்துக்கு சென்றது.

உற்சாக வரவேற்பு

அப்போது செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த ஜோதிக்கு பின்னால் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு பல்வேறு வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு இந்த ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்த ஜோதியை முதல் பெண் சதுரங்க ஒலிம்பியாட் வீராங்கனை நிர்மலாவிடம் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், சு.முத்துசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.

தொடர்ந்து இந்த ஜோதியை 14 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வருவாய் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த 13 விளையாட்டு வீரர்களை அமைச்சர்கள் பாராட்டி புத்தகங்களை வழங்கினார்கள்.

பல்வேறு பெருமைகள்

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்துக்கு பல்வேறு பெருமைகளை சேர்த்து வருகிறார். அந்த வகையில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் செஸ் போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச அளவில் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற விஸ்வநாத் ஆனந்த், முதல் பட்டத்தை கோவையில் நடந்த போட்டியில்தான் பெற்றார் என்றார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, நமது தேசியமும், நமது மாநிலமும் செஸ் போட்டியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை மாமல்லபுரத்தில் நடக்கும் போட்டி காட்டுகிறது. தமிழக முதல்-அமைச்சர் இந்த போட்டியை கவனித்து வருகிறார். கிராமத்தின் அனைத்து பகுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

மதுரை சென்றது

கோவையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அங்கு சென்றதும், பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு பின்னர் சென்னை சென்றடைகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர்கள் சமீரன் (கோவை), அம்ரித் (நீலகிரி), வினீத் (திருப்பூர்), கிருஷ்ணனுண்ணி, (ஈரோடு), கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் ராமசுப்பிரமணியராஜா, மாவட்ட விளையாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்