சாத்தூர்.
சாத்தூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் அசோக், ஆணையாளர் இளவரசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:- தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் வீதிகளில் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு ரதவீதி, பள்ளிவாசல் அருகே பெண்கள் பொது சுகாதார வளாகம் கட்ட வேண்டும். கீழத்தெருவில் உள்ள சத்துணவு மையத்தில் தரைத்தளம் பெயர்ந்து உள்ளதை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர் சங்கர் வலியுறுத்தினார். அதேபோல 4-வது வார்டு சிதம்பரம் நகர், எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பாலம் அருகே உள்ள சாலை சேதம் அடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர் கணேஷ்குமார் கோரிக்கை வைத்தார். கவுன்சிலர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் இளவரசன் கூறினார்.