சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது
தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தண்டராம்பட்டு
தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.
சாத்தனூர் அணை மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்காக ஆண்டுதோறும் 90 நாட்களுக்கு பாசனத்திற்காக அணையின் நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் 3 மாதங்கள் இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
நிரம்பி வருகிறது
இந்த நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 113.15 அடியை எட்டியுள்ளது. அதாவது 6056 மில்லியன் கன அடி நீர் அணையில் தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் கொள்ளளவில் இது 82.72 சதவீதம் ஆகும். வினாடிக்கு 475 கன அடி நீர் தற்போது அணைக்கு வந்து கொண்டிருக்கிறது சாத்தனூர் அணை பகுதியில் நேற்று இரவு மட்டும் 60 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து சாத்தனூர் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.