ரங்கநாத பெருமாள் கோவிலில் ரூ.78 லட்சத்தில் தேர் செய்யும் பணி
ஆதிதிருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில் ரூ.78 லட்சத்தில் தேர் செய்யும் பணியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு தேர் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவை ஆதிதிருவரங்கம் கிராமத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அழைத்து வந்து, கோவிலை சுற்றி காண்பித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் சேகர்பாபு ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு தேர் செய்ய ரூ.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி புதிய தேர் செய்யும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் பாலாஜிபூபதி தலைமை தாங்கினார். மணலூர்பேட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் எம்.ஜெய்கணேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் துணை தலைவர் ஜம்பை பாலகிருஷ்ணன், ரிஷிவந்தியம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாரதிதாசன், பெருமாள், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறையை இணை ஆணையர் சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் புதிய தேர் செய்யும் பணியை பூஜை போட்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
திருப்பணிக்கு ரூ.5¼ கோடி ஒதுக்கீடு
ஆதிதிருவரங்கம் கோவிலில் திருப்பணி செய்ய ரூ.5 கோடியே 25 லட்சமும், திருத்தேர் செய்ய ரூ.78 லட்சமும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர ஜம்பை, தகடி, முடியனூர், கூவனூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை உள்ளிட்ட கோவில்களுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருங்காலங்களில் விடுபட்ட கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அரசு மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அய்யனார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜீவ்காந்தி, உதயா, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஜம்பை முத்துவீரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அமிர்தம் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பரிமளாஜோதி, மணலூர்பேட்டை நகர தி.மு.க. நிர்வாகிகள் சையத்அலி, சரவணன் மற்றும் மருர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.