தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

Update: 2023-04-30 19:45 GMT

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

தஞ்சை பெரியகோவில்

மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அழகுறக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. பெரியகோவிலின் கட்டமைப்பும், அதன் பிரமாண்டமும் அதை காண்பவர்களுக்கு எப்போதும் சிலிர்ப்பைத் தந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராளமானோர் பெரியகோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் முன்பு சித்திரை திருவிழா 20 நாட்கள் நடைபெறும் பெருந்திருவிழாவாக இருந்து வந்தநிலையில் காலப்போக்கில் 18 நாட்களாக சுருங்கிவிட்டது. என்றாலும் இந்த விழா வெகு விமரிசையாகவே கொண்டாடப்பட்டன. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் நின்றுபோன இந்த விழாக்கள் மீண்டும் நாயக்கர் மன்னர்கள், அவர்களை தொடர்ந்து மராட்டிய மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்டன.

நின்று போன தேரோட்டம்

காலப்போக்கில் தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்தன. மராட்டியர்களுக்கு பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. செலவு செய்து தேரை ஓட்டுவதற்கு யாரும் முன் வராததால் தேரோட்டம் நின்று போனது. இதனால் இடைப்பட்ட காலத்தில் சித்திரை திருவிழா களையிழந்து காணப்பட்டது.

பெரியகோவிலில் தேர் இல்லாத குறையை போக்குவதற்காக தமிழகஅரசு புதிய தேரை உருவாக்க கடந்த 2013-ம் ஆண்டில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து சுமார் 1½ ஆண்டு தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த தேரை உருவாக்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் தேர் திருப்பணி நிதியில் இருந்து ரூ.17 லட்சமும், தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிதியில் இருந்து ரூ.20 லட்சமும் செலவிடப்பட்டது.

இன்று தேரோட்டம்

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதன்மூலம் சித்திரை திருவிழாவும் புத்துயிர் பெற்றது. தொடர்ந்து ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் 15-ம் நாளன்று தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி, அம்மன் வீதிஉலா 4 ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.

தயார் நிலையில் அலங்கரிக்கப்பட்ட தேர்

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலைக்கு வருகின்றனர். பின்னர் தியாகராஜசாமியும், கமலாம்பாளும் தேரில் எழுந்தருளிகின்றனர். விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருள்கின்றனர். பின்னர் பக்தர்களால் வடம் பிடித்து தேர் இழுக்கப்படுகிறது.

இதையொட்டி, மேல வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேருக்கு, கடந்த மாதம் 24-ந் தேதி தேரோட்டத்துக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு, அன்று முதல் தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அலங்கரிக்கும் பணி முடிவடைந்து தேரோட்டத்திற்கு தயார் நிலையில் தேர் உள்ளது. தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்