வீட்டு இணைப்பிற்கு கூடுதலாக பணம் வசூலிப்பு

பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பிற்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்

Update: 2022-05-31 15:42 GMT

பொள்ளாச்சி

பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பிற்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

நகராட்சி கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கழிப்பிடங்கள் பராமரித்தல், சாலைகள் சீரமைத்தல், சிறு பாலம் கட்டுதல் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளுதல் உள்பட 152 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணை தலைவர் கவுதமன்:-

பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பு கொடுப்பதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. வார்டு பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை. பஸ் நிலையத்தில் நகராட்சி கடையை குறைந்த வாடகைக்கு விடும் போது, ஏன் ரெயில் நிலையம் அருகில் உள்ள கடைகளை குறைந்த வாடகைக்கு விடுவதில்லை. விடுப்பட்ட கடைகளையும் ஏலம் விட்டு நகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்த வேண்டும்.

தெருவிளக்கு பராமரிப்பு

கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா:-

பொள்ளாச்சி நகராட்சியில் அதிகமாக சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. மீண்டும் வரியை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த 2018-ம் ஆண்டு சொத்து வரியை உயர்த்திய போது, பொள்ளாச்சியில் மீண்டும் குறைவாக 18 சதவீதம் உயர்த்தி அரசாணை பெறப்பட்டது. எனவே அந்த அரசாணையை மேற்கோள் காட்டி தற்போதும் வரியை குறைக்க வேண்டும். மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. கூடுதலாக ஆட்களை நியமித்து மின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் நேரம் தெரியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கவுன்சிலர் செந்தில்:-

ஜோதி நகரில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பூங்காக்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. எனவே அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பூங்காவை சுற்றியும் கம்பி வேலி அமைக்க வேண்டும். காமராஜ் நகர் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை.

தனி மாவட்டம்

கவுன்சிலர் சாந்தலிங்குமார்:-

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கூட்டத்திற்கு வரும் போது வழங்கும் அமர்வுபடி எனக்கு வேண்டாம். அதை அரசு பள்ளிகளில் கரும்பலகைகளில் வர்ணம் தீட்டும் பணிக்கு வழங்குகிறேன்.

கவுன்சிலர் நர்மதா:- சாலைகளை தோண்டி குடிநீர் குழாய்கள் போடுகின்றனர். பிறகு சாலையை சீரமைப்பதில்லை. எனவே அதை கண்காணித்து சாலைகளை சீரமைக்க வேண்டும். ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கவுன்சிலர் துரைபாய்:- திரு.வி.க. மார்க்கெட் கட்டும் போது வாகனங்கள் நிறுத்த இடவசதி, மேற்கூரை, கழிப்பிடம் ஏற்படுத் தும் பணிகள் பாதி கூட முடியவில்லை. அங்கு ரூ.40 லட்சத்தில் அமையும் கழிப்பிட பணிகளை விளக்கம் அளிக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதை தொடர்ந்து நகராட்சி தலைவர் சியாமளா கூறுகையில், பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பிற்கு கூடுதலாக பணம் கொடுக்க வேண்டியதில்லை. கூடுதல் பணம் கேட்டால் புகார் கொடுக்கலாம். தெருவிளக்குகள் பராமரிப்பிற்கு கூடுதலாக ஆட்களை நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப் படும்.

தொடர்ந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

ஆணையாளர் தாணுமூர்த்தி கூறுகையில், பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பு கொடுப்பதற்கு கூடுதலாக பணம் கேட்கும் நபர் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகளை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்