மேலும் 2 வழக்குகளின் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல்

நாகர்கோவில் காசி மீதான மேலும் 2 வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி.யினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை நடக்கிறது.

Update: 2022-07-01 21:47 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் காசி மீதான மேலும் 2 வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி.யினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை நடக்கிறது.

நாகர்கோவில் காசி

நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் சுஜி என்ற காசி (வயது 27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக ஆன்லைன் மூலம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதேபோல நாகர்கோவில் பகுதியை சோ்ந்த இளம்பெண் ஒருவரும் காசி மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான இளம்பெண்கள், முக்கிய பிரமுகர்களின் மனைவி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

வெளிநாட்டில் நண்பர் தலைமறைவு

இதனை தொடர்ந்து காசி மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கும், ஆரல்வாய்மொழியில் 2 வழக்குகளும், நேசமணி நகரில் ஒரு வழக்கும், வடசேரியில் 2 வழக்குகளும் என மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் வடசேரி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு கந்து வட்டி வழக்காகும். மற்ற வழக்குகள் அனைத்தும் பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்குகளாகும்.

காசி விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, இந்த வழக்குகள் அனைத்தும் குமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் காசியின் நண்பர்களான 2 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மற்றொரு நண்பர் வெளிநாட்டில் உள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை...

இதற்கிடையே காசிக்கு உதவும் வகையில் லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக அவரது தந்தை தங்கபாண்டியனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் தங்க பாண்டியன் தரப்பில் மதுரை கோர்ட்டில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ரகசிய விசாரணை

இதற்காக காசியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, காசி மீதான 8 வழக்குகளில், இனி 2 வழக்குகளுக்கு மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் பலர் சாட்சியம் அளிக்க வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் விரைவில் செய்யப்படும். மேலும் வெளிநாட்டில் உள்ள நண்பரை கைது செய்யும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு காசி விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்