குற்றாலத்தில் 5-ந் தேதி சாரல் திருவிழா தொடக்கம்

குற்றாலத்தில் வருகிற 5-ந் தேதி கலை நிகழ்ச்சிகளுடன் சாரல் திருவிழா தொடங்குகிறது, என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்

Update: 2022-07-28 13:56 GMT

குற்றாலத்தில் வருகிற 5-ந் தேதி கலை நிகழ்ச்சிகளுடன் சாரல் திருவிழா தொடங்குகிறது, என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாரல் திருவிழா

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் சாரல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சாரல் திருவிழா வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 8 நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட உள்ளது.

குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இந்த விழா நடைபெறுகிறது. இதேபோன்று குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தக திருவிழாவும் நடைபெறுகிறது. இது 10 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அமைக்கப்பட உள்ளன.

அமைச்சர்

இந்த விழாக்களை வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார். சாரல் திருவிழா நடைபெறும் கலைவாணர் கலையரங்கின் வெளிப்பகுதியில் பல்வேறு அரசு துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

சாரல் திருவிழாவில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கச்சேரி, ஆணழகன் போட்டி, நாய் கண்காட்சி, பழமைவாய்ந்த கார்கள் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புத்தக திருவிழாவிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் இலக்கியம் சார்ந்து இருக்கும்.

மலர் கண்காட்சி

மேலும் ஐந்தருவியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் 3 நாட்கள் மலர் கண்காட்சி, பழ கண்காட்சி ஆகியனவும் நடத்தப்பட உள்ளன. இந்த விழா நிகழ்ச்சிகளுக்கு அரசு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரின் செல்போன் எண்ணிற்கு விவரங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்