ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் சப்பரப்பவனி
ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் திருவிழாவையொட்டி சப்பரப்பவனி நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தலத்தில் புனித அருளானந்தரின் 330-ஆம் ஆண்டு மறைசாட்சி திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் திருவிழா, திருப்பலி, சிறப்பு மறையுறை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருச்சி மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை அந்துவான், ஓரியூர் பங்குத்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை ஆகியோர் தலைமையில் அருட்தந்தையர்களால் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித அருளானந்தர், ஆரோக்கிய மாதா ஆகியோர் பவனியாக வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர். நேற்று காலை திருவிழா நன்றி திருப்பலியும் மாலை கொடி இறக்கமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.