சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 35 பயணிகளை ஏற்றாமல் சென்ற அபுதாபி விமானம்

சென்னை விமான நிலையத்தில் மழை காரணமாக தாமதமாக அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் 35 பயணிகளை ஏற்றாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-25 23:43 GMT

மீனம்பாக்கம்,

அபுதாபியில் இருந்து 'ஏர்அரேபியா ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து அபுதாபிக்கு இரவு 7:45 மணிக்கு அபுதாபி புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த 182 பயணிகளும் குடியுரிமை மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடித்து விட்டு காத்திருந்தனர். இந்த விமானத்தில் அபுதாபிக்கு செல்ல வேலைக்காக 5 பெண்கள் உள்பட 35 பேர் ஒரு குழுவாக அமர்ந்து இருந்தனர்.

பயணிகள் போராட்டம்

இதற்கு இடையே நள்ளிரவு 12.30 மணி ஆகியும் பயணிகளை விமானத்தில் அழைத்து செல்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் அறிவிக்கபடாததால், 35 பயணிகளும் கவுண்ட்டருக்கு சென்று கேட்டபோது, நள்ளிரவு 12:18 மணிக்கு விமானம் அபுதாபிக்கு புறப்பட்டு சென்று விட்டதாக ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பயணிகளிடம் 'உங்கள் டிக்கெட் காலவதியாகிவிட்டது. நீங்கள் முறைப்படி பணத்தை திரும்ப பெற்று கொண்டு புதிதாக டிக்கெட் முன்பதிவு செய்து வேறு விமானத்தில் பயணம் செய்யுங்கள்' என்று விமான ஊழியர்கள் அலட்சியமாக பதில் கூறினர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த 35 பயணிகளும் சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 5 மணி நேரமாக விமானம் தாமதமாக புறப்பட்ட நிலையில், முறையாக அறிவிப்பு வழங்காமல் 35 பயணிகளையும் ஏற்றாமல் சென்றது ஏன்? என பயணிகள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்கள்.

விமான நிலையத்தில் பரபரப்பு

இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை சமாதானம் செய்தனர்.

இது பற்றி பயணிகள் கூறுகையில், போர்டிங் பாஸ் வாங்கிய 35 பயணிகள் விமானத்தில் வந்து ஏறவில்லையே ஏன்? என்று விமான ஊழியர்கள் விசாரிக்கவில்லை. இது பற்றி பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளை கேட்டபோது ஏதோ எங்கள் தரப்பிலும் தவறு நடந்து விட்டது. ஆனாலும் இனிமேல் இதில் எதுவும் செய்ய முடியாது என்று புகார் தெரிவித்தனர். இது பற்றி சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்