பிரகதாம்பாள் கோவில் மேற்பார்வையாளர் மாற்றம்

புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்த விபத்தில் மேற்பார்வையாளர் மாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2022-08-09 17:56 GMT

தேர் விபத்து

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. தேர் நிலையில் இருந்து புறப்பட்ட உடனே சில நிமிடங்களில் முன்பக்கமாக கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) என்பவர் கடந்த 7-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தேர் விபத்தில் மூதாட்டி இறந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தேர் விபத்தை திருக்கோகர்ணம் போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்திருந்ததை விபத்து மரணம் என மாற்றம் செய்தனர்.

விசாரணை குழு

தேர் விபத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் காரணம் என்றும், அவர்களை கைது செய்யக்கோரி பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர் விபத்து தொடர்பாக பணியாளர்கள் 2 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும், அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோவில் பணியாளர்கள் தரப்பு மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தேர் விபத்து தொடர்பாக கடந்த 1-ந் தேதி அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த குழுவினர் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை.

மேற்பார்வையாளர் மாற்றம்

இந்த நிலையில் பிரகதாம்பாள் கோவில் மேற்பார்வையாளர் பணியை கவனித்து வந்த மாரிமுத்து மாற்றப்பட்டார். இவர் மாவட்டத்தில் நார்த்தாமலை, குடுமியான்மலை உள்பட 100 கோவில்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியோடு தான் அவர் பிரகதாம்பாள் கோவில் மேற்பார்வையாளர் பணியையும் கவனித்தார். இந்த நிலையில் மாரிமுத்துவுக்கு பதிலாக தட்சிணாமூர்த்தி என்பவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேரையூர், ஆலங்குடி, திருவரங்குளம், நெடுங்குடி, திருவப்பூர், சாந்தநாதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். தற்போது கூடுதலாக பிரகதாம்பாள் கோவில் மேற்பார்வையாளர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

காலிப்பணியிடம்

புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவில்கள் 235-க்கும் மேற்பட்டவை உள்ளன. இதில் மேற்பார்வையாளராக 16 பேர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரே நபர் 100-க்கும் மேற்பட்ட கோவில்களின் மேற்பார்வையாளர் பணியை கவனிக்கிறார். எனவே கோவில் மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்