திருப்பத்தூரில் பொதுபோக்குவரத்து மாற்றம்
திருப்பத்தூரில் நாளை பொதுபோக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக திறப்பு விழாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதை முன்னிட்டு திருப்பத்தூரில் நாளை (புதன்கிழமை) பொதுபோக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் பொதுபோக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும் மாற்றுவழிப்பாதை:
சென்னை, வேலூர் மார்க்கத்தில் இருந்து சேலம். தர்மபுரி மார்க்கமாக செல்லும் அனைத்து கனரக மற்றும் சரக்கு வாகனங்களும் செட்டியப்பனூர் வழியினை தவிர்த்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி செல்ல வேண்டும்.
பர்கூர் இணைப்பு சாலையில் இருந்து திருப்பத்தூர் வழியாக வேலூர் செல்லும் அனைத்து கனரக, சரக்கு வாகனங்களும் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.
திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மார்க்கமாக திருப்பத்தூர் வழியாக வேலூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வெங்களாபுரம் இணைப்புச்சாலை வழியாக ஆலங்காயம், வாணியம்பாடி வழியாக செல்ல வேண்டும்.
சரக்குகளை ஏற்றி இறக்க தடை
உள்ளூர் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் நாளை காலை 6 முதல் பிற்பகல் 12 மணிவரை திருப்பத்தூர் நகர் பகுதிக்குள் சரக்குகளை ஏற்ற, இறக்க மற்றும் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாற்றுப்பாதைகள்:
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்று வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஏரிக்கோடி வழியாக மடவாளம் இணைப்புச்சாலை சென்று அந்தந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும். தவிர பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது.
திருவண்ணாமலை இருந்து வரும் பொது போக்குவரத்து
வாகனங்கள், பஸ்கள், கார்கள் அனைத்தும் வேலூர் செல்ல வெங்களாபுரம் இணைப்புச்சாலை வழியாக ஆலங்காயம், வாணியம்பாடி வழியாக செல்ல வேண்டும்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மார்க்கமாக வேலூர் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்கள் அவ்வை நகர் சி.கே.ஆசிரமம் வழியாக புதுப்பேட்டை-நாட்றம்பள்ளி வழியாக வேலூர் செல்ல வேண்டும்.
கனரக மாகணங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் நகருக்குள் பொதுபோக்குவரத்தில் நெரிசல் ஏற்படாதவரை அனுமதிக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.