சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியது:கரூர் பொதுமக்கள் இனிப்புகள் கொண்டாட்டம்

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதை கண்டு கரூர் பொதுமக்கள் கைத்தட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-23 19:07 GMT

சந்திரயான்-3

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏற்கனவே சந்திரயான் 2-ஐ கடந்த 2019-ல் அனுப்பி இருந்தது. அப்போது லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதியதால் தகவல் தொடர்பு கிடைக்காமல் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. ஆனாலும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா செலுத்தியுள்ளது. சந்திரயான்-3 லேண்டருடன் ஏற்கனவே நிலவை சுற்றி கொண்டிருக்கும் ஆர்பிட்டர் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளது.

இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறி கொண்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாக தரையிறங்கினால் இந்த பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது. மேலும், நிலவில் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படாத அதன் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல்நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி

இந்தநிலையில் கரூரில் பெரும்பாலான வீடுகளில் டி.வி. மற்றும் தொலைக்காட்சிகளில் சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்குவதை மிகவும் ஆர்வமாக கண்டு களித்தனர். கடைசி நேரத்தில் சந்திரயான் தரையிறங்கியபோது, அனைவரும் கைத்தட்டியும், விசில் அடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ஒரு சில இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் சிலர் தேசிய கொடியை கையில் ஏந்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு சில கல்லூரிகளிலும் சந்திரயான் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக காணும் வகையில் அகண்ட திரை அமைத்து சிறப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

நம்பிக்கையை விதைத்திருக்கிறது

வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மனோகரன்

சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த நமது இந்தியாவின் சாதனையை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். நாம் வாழும் காலத்தில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய இந்திய விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் வீரம் செறிந்த பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பள்ளியில் படித்து கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை இன்றைய நிகழ்வு ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நிலவுக்கு அப்பாலும் நாம் ஆராய்ச்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் கனவு நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

வரலாற்று சாதனை

தோகைமலை நெசவாளர் காலனியை சேர்ந்த என்ஜினீயர் சுபாஷ் சந்திரபோஸ்:-

அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நிலவின் வட துருவத்தில் மட்டுமே ராக்கெட்டை ஏவி உள்ளனர். தற்போது நிலவின் தென் துருவத்தில் இருட்டான பகுதியில் சந்திரயான் 3-ஐ இந்தியா செலுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனால் நமது நாடு வல்லரசு ஆகுவதற்கும் இது ஒரு முக்கிய குறிக்கோளாகவும் அமைகிறது. மேலும் இந்த சாதனை மூலம் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியும் மேலோங்கும்.

மாணவர்களுக்கு தூண்டுகோல்

கரூர் சின்னமலைபட்டியை சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் நாகராஜன்:-

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை இறக்கியதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா. இந்த சாதனை எதிர்கால மாணவர்கள் அறிவியல் துறையில் முன்னேற ஒரு தூண்டுகோலாக அமையும். விண்வெளியில் இனி இந்தியாவின் கையே உயர்ந்து இருக்கும். இந்த சாதனையை படைத்த விஞ்ஞானிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கும் பாராட்டுகள். இதேபோல் இன்னும் பல சாதனைகள் புரிவோம்.

உறுதுணையாக இருப்போம்

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமலி டெய்சி:-

சந்திரயான்-3 நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியதை எண்ணி 140 கோடி இந்தியர்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். நாம் வாழக்கூடிய பூமியின் துணை கோளான நிலா பல மர்மங்களை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. நிலவின் தென் துருவத்தில் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக சூரிய வெளிச்சமே இல்லாத பகுதிகளும், பள்ளங்கள், குகைகளும் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் நிலாவை பற்றி ஆராய்ச்சி செய்யும்போது சூரிய குடும்பத்தை பற்றிய பல அறிய தகவல்கள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தற்போது அனுப்பப்பட்ட சந்திரயான்-3 நன்றாக திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டதால் 40 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து நிலவில் தரை இறங்கியது. இதன் மூலம் வல்லரசு நாடுகளைப் பின் தள்ளி நிலவில் தென்துருவத்தில் முதலில் தரை இறங்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதை இன்றைய இளைய தலைமுறை மாணவ-மாணவிகள் அதிக ஆர்வத்துடன் பார்த்து, தாங்களும் விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளனர். அவர்களின் உத்வேகத்திற்கு என்னை போன்ற ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்போம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

பெருமை கொள்வோம்

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியின் மின்னணுவியல் துறைத்தலைவர் இணை பேராசிரியர் அன்பரசு:-

இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 4 ஆண்டு காலமாக மேற்கொண்ட இடைவிடா முயற்சியின் காரணமாக சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என்ற பெருமையை ஈட்டி உள்ளது. இதன் மூலம் உலக நாடுகளில் இந்தியா வல்லரசு நாடு என நிருபித்துள்ளது. இந்நிகழ்வின் மூலம் புதிய இந்தியாவிற்கு விடியல் பிறந்துள்ளது. நமது பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதை போல வெள்ளி கிரகத்தை அடைவதற்கு இன்றைய இளம் விஞ்ஞானிகள் முயற்சிகள் மேற்கொண்டு அதில் விரைவில் வெற்றியடைய வேண்டும். இன்றைய வெற்றியை இந்தியராக நாம் ஒவ்வொருவரும் போற்றுவோம் பெருமை கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்