கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகரும் வீதிஉலா வந்தனர்.

Update: 2022-12-01 17:01 GMT



கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகரும் வீதிஉலா வந்தனர். நாளை (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று காலை 11 மணி அளவில் சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

பின்னர் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். முன்னதாக சாமி வீதியுலா சென்ற வாகனங்கள் மற்றும் மாட வீதியில் போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர்.

இரவு 11 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வெள்ளி தேரோட்டம்

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நாயன்மார்கள் வீதியுலா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு நாயன்மார்கள் வீதியுலா நடைபெற உள்ளதால் சாமியை மாணவர்கள் வரிசையாக சுமந்து வரும் காட்சியை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறுகிறது. இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

தேரோட்டம்

மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேரான (சாமி தேர்) மகா ரதம் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.


 



தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளின் தேர்களில் பொருத்தப்படும் கலசங்களுக்கு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கலசங்கள் கோவிலில் இருந்து தேரடி வீதிக்கு கொண்டு வரப்பட்டு தேரோட்டம் நடைபெறும் வரிசை முறைப்படி முதலில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களில் பொருத்தும் பணி நடைபெற்றது.

கடந்த 2 வருடங்களாக பக்தர்களின்றி கோவில் வளாகத்திற்குள்ளேயே தேரோட்டம் நடைபெற்றதால் இந்த ஆண்டு மாட வீதியில் நடைபெற உள்ள தேரோட்டத்தை காண மக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்