தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-16 02:35 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மழை பரவலாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தலைநகர் சென்னையில் அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்ட முன்ஏற்பாடுகளால் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடந்த வாரம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதில் அதிக அளவாக 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை வெளுத்து வாங்கியது.

குடியிருப்புகள் வெள்ளக்காடாக மாறியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். பல ஏக்கர் விளைநிலங்களும் நீரில் மூழ்கின. இதற்கிடையே கடந்த சில தினங்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. சென்னையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது.

இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்