தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 25 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-17 08:27 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 25 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், தமிழக கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்