திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை

கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Update: 2023-07-26 20:00 GMT

பெண்களை தாக்கும் பல்வேறு நோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் ஒன்று. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதும், அதன்பிறகு மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

பொதுவாக இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகள் இதுவரை இங்கு செய்யப்பட்டதில்லை. ஆனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை இங்கு செய்யப்பட்டது.

திண்டுக்கல் சுற்றுபுற கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பப்பை பாதிக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தனர். அதன்படி அந்த பெண்ணுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த பெண் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இத்தகவலை மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவு டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்