கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 555 பேருக்கு சான்றிதழ்
மயிலாடுதுறையில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவடைந்தது. இதையொட்டி நடந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 555 பேருக்கு கலெக்டர் மகாபாரதி சான்றிதழ் வழங்கினார்.
மயிலாடுதுறையில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவடைந்தது. இதையொட்டி நடந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 555 பேருக்கு கலெக்டர் மகாபாரதி சான்றிதழ் வழங்கினார்.
சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி 10 நாட்கள் நடந்தது. புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நடைபெற்றது. கண்காட்சியையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 555 பேருக்கு கலெக்டர் மகாபாரதி பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
செய்தி மக்கள் தொடர்புத்துறை என்பது அரசுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாக விளங்கி வருகிறது. தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சாதனைகள் அடித்தட்டு மக்களை சென்று சேர்வதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி, மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு செய்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அப்படிப்பட்ட பத்திரிகைகளை ஒருங்கிணைத்து வரும் செய்தி விளம்பரத் துறை சார்பில் 10 நாட்கள் நடந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கங்களை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
பாராட்டு சான்றிதழ்
கடந்த 10 நாட்களாக இந்த அரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 555 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பாக 10 பேருக்கு ரூ.1.56 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் யுரேகா, ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணாசங்கரி, சமூக பாதுகாப்பு ்திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கலைக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.