கோடை கால பயிற்சி முகாமில் வீரர்களுக்கு சான்றிதழ்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
நாலுமாவடியில் நடந்த கோடை கால பயிற்சி நிறைவு முகாமில் வீரர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்க விளையாட்டு துறை சார்பில் 5-ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் 1-ந்தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெற்றது. முகாமில் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கழக தலைவருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்கினார். முகாம் பொறுப்பாளர் எட்வின் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம்ரீவ்ஸ், முகாம் ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் கணேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார், மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை இயக்குனர் அன்புராஜன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை அமெச்சூர் கபடி கழகமும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனம் மற்றும் புதுவாழ்வு சங்கமும் இணைந்து செய்திருந்தனர்.
தெற்கு ஆத்தூரில் உள்ள மைதானத்தில் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செயலாளரும், மேல ஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவருமான ஏ.பி.சதீஷ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், மாநில தலைமைக்கழக பேச்சாளர் சரத் பாலா உள்பட பலர் தெருமுனை பிரசாரம் பற்றி விவரித்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து தலைவர் ஏ.கே. கமால்தீன், ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்து துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முக்காணி மெயின் பஜாரில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக தெருமுனை பிரசாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதில் 5 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் மற்றும் இலவச சேலை, அரிசி வழங்கப்பட்டது.