கோடைகால பயிற்சியை நிறைவு செய்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்
திண்டுக்கல்லில் கோடைகால பயிற்சியை நிறைவு செய்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழக கலை பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த முகாமில் 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 200 மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், சிலம்பம், நாட்டுப்புற நடனம், ஜிம்னாஸ்டிக், கராத்தே, மல்லர் கம்பம் மற்றும் கயிறு ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
பயிற்சியின் நிறைவு நாளான நேற்று மாணவ-மாணவிகள் கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுபுற நடனமாடினர். மேலும் சிலம்பம், மல்லர் கயிற்றில் ஏறி யோகாசனம் செய்துகாட்டி அசத்தினர். பின்னர் பயிற்சிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனை கலை பண்பாட்டு துறை மதுரை மண்டல இணை இயக்குனர் செந்தில்குமார் வழங்கி பேசினார். இதில், ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் ரமணி, முதன்மை கராத்தே பயிற்சியாளர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.