திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் சான்றிதழ்களை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உன்னதி, ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், அரசு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்துறை, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனமாகிய உன்னதி, ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு ஒழுக்கம், ஆங்கில மொழியில் சரளமாக உரையாடுதல், வேலைவாய்ப்பு குறித்த நேர்க்காணலை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள், தன்னம்பிக்கையை வளர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
தாழ்வுமனப்பான்மை
இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் தாழ்வு மனப்பான்மையை போக்கி, தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வில் உன்னதமான நிலையை அடைய வேண்டும் என்பதே ஆகும் என்றார். தொடர்ந்து திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 20 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட இயக்குனர் ராஜா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் முரளிதரன், மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் கலைச்செல்வி, மகாத்மாகாந்தி தேசிய பயிற்சி மாணவி சுஜாதா, அரசு கலைக்கல்லூரி முதல்வர் மோகன்தாஸ், வேலைவாய்ப்பு தொடர்பு அலுவலர் அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.